Wednesday, November 9, 2011

நெஞ்சு பொறுக்குதில்லையே

நெஞ்சம் வலிக்கின்றது - இந்த
மானுட மாண்புகள்
மறித்து போவதை எண்ணி!
பசி பட்டினி சாவினில்
நாம்தான்
முதலிடமாம்....

பல 
அம்பானிகளும் 
மிட்டல்களும் - நிறைந்த 
நாம்தான் 
இச்சாபக்கேட்டிலும் 
முதலிடமாம்...

வலியோர் வலியோராகவும்
எளியோர் எளியோராகவும் 
எண்ணினால் 
கண்களில் கண்ணீர்...
கண்கள் 
கலங்கி கலங்கி 
கண்ணீரும் வற்றிப்போயிற்று...
கண்ணீர் சிந்தவும் 
வழியில்லாமல் 
கண்காணா வீதிகளில் 
சடலங்களாய்...

வருடந்தோறும் 
வனப்பான புதுமைகள் 
நிதியறிக்கைகளில் மட்டும்...
யாருக்கு என்ன பலன்? - அந்த 
நீதியற்ற அறிக்கைகளால்...
உயிரே ஊசலாடும்போது 
ஊஞ்சல்களுக்கும்  
நாய் ரொட்டிகளுக்கும் 
விலையில் மலிவாம் 
பாரதியின் பாதியை மட்டும் 
பார்த்திருப்பனரோ!  

"வல்லரசு நாடுகளின் பட்டியலில்
விரைவில் நாம்"
மந்திரிகளும்
மக்கள் பிரதிநிதிகளும்
அறிக்கைகளில் மட்டும்...
மானுடமே இல்லாமல்
பட்டியலில் இந்தியா...
நெஞ்சு பொறுக்குதில்லையே!

பசி தீர்த்து மனிதம் காக்க
வழி காணாமல்
உயிர் தீர்த்து
ஆயுதம் காக்கும் வழியில்
என் இந்தியா...
என்னே கொடுமை!
பாதுகாப்பிற்கு
பல்லாயிரம் கோடிகளாம்...
யாரின் பாதுகாப்பிற்கு?
மானுட சதைப்பிண்டங்களுக்கா?
நெஞ்சு பொறுக்குதில்லையே!